நினைவினூடாய்,,,


அவரை தோழர் என அழைப்பதா, இல்லை கற்றுத் தந்த ஆசிரியர் என அழை ப்பதா, இல்லை குரு என மனதுக்குள் உருவகித்துக்கொள்வதா,,,?

பழைய நாட்கள் அவை/

நினைத்துப்பார்க்கவும் அசை போடவுமாய் இனிக்கும் நினைவுகளை மனம் தடவி வைத்திருந்த பொழுதுகளின் ரசவாதங்கள் துள்ளலாய் நகர்வு கொண்ட நாட்கள்,

தொண்ணூறுகளின் முற்பகுதி என்கிறதாய் நினைவு/ வழக்கம் போல் பணி முடிந்த மாலை வேளையில் டீகடை ஒன்றில் நின்று கொண்டிருந்தேன்,

அப்பொழுது எனக்குள் இருந்த டீக்குடிக்கும் பழக்கத்தை நண்பர் ஒருவர் இவ்விதமாய் விவரிப்பதுண்டு,

“என்ன இது ,டீக்குடிக்கும் முன்னாடி ஒரு டீக்குடிக்கிறீங்க, டீக் குடிக்கும் போது ஒரு டீக்குடிக்கிறீங்க, டீக்குடித்த பின்னாடி ஒரு டீக் குடிக்கிறீங்க,என்பார்,

அவரது பேச்சிறிக்கு பெரும்பாலுமாய் பதிலேதும் சொல்லாமல் நகர்கிற நாட் கள் ஒன்றில்தான் தோழர் மாரிக்கனி அவர்களுக்கும் எனக்குமான சந்திப்பு நிகழ்கிறது குறிப்பிட்ட இடமொன்றின் சூழ் கொண்ட சூழலில்,

அப்பொழுதெல்லாம் இன்று போல் செல் போன் கிடையாது, லேண்ட் லைன் போனே அலுவலகங்களில் மட்டுமே காணக் கிடைக்கிற பாக்கியம். அதுவும் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும் பேசிக்கொள்ளலாம், இப்போது போல் நினை த்த நேரத்தில் நினைத்த இடத்தில்உறை கொண்டுள்ள நினைத்த நபருடன் தொடர்பு கொண்டு பேசி விடமுடியா காலம்.,நேரில் வந்தழைப்பதும், ஆள் மூலம் சொல்லி அனுப்பவதும் மனம் தொட்டுபேசுவதுமாய் இருந்த ஈரமான காலம். அந்த ஈரத்தின் கைபிடித்தும் நுனி பற்றியுமாய் வந்தழைத்தவரின் உடன் செல் கிறேன்,

செல்கிற வழியில் வந்தழைத்தவருடன் வழிநெடுக பேசியதில் என் மானசீக குரு தோழர் எஸ் ஏ பி அவர்கள் அங்கிருக்கிறார்கள் மாரிக்கனி அவர்களுடன் பேசிக்கொண்டு என அறிகிறேன்,
அவர் அழைத்துப்போன இடம் வந்ததும் வாருங்கள் தோழர் நலம்தானே,,,? என்கிற விசாரிப்புடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிற நாடகப் பயி ற்சி முகாம் ஒன்று மார்த்தாண்டத்தில் நடக்கிறது,கலந்து கொள்ள இயலுமா தங்களால்,எனதான் அழைத்த நோக்கத்தை சொல்லிவிடுகிறார் பட்டென/

அழைத்த நோக்கத்தை ரகசியம் ஏதும் வைத்துக்காக்காமல் பட்டென சொன் னவரிடம் சொல்கிறேனே நாளைக்குள்ளாய் எனச்சொல்லிவிட்டு வீடு கிளம் பியவனை அர்த்தப்பூர்வமாய் பார்த்த தோழர் எஸ்.ஏ.பி அவர்கள் என்னை ஊடுருவினாரா இல்லை ஆழ்ந்து அவதானித்தாரா அந்தக்கணங்களில் என்பது இன்று வரை என்னில் பெரிய கேள்விக்குறி விதைத்ததாகவே/

விதைகொண்டபார்வையைமடியில்அள்ளிக்கட்டிக்கொண்டவனாய் விரைந்து விடுகிறேன் வீடு நோக்கி.

உடல் சென்ற விரைவை உட்கொண்ட மனதின் அவசரம் மறுநாள் காலை விடியும் முன்பாய் தோழர் மாரிக்கனி அவர்களைபார்த்து மார்த்தாண்டத்திற்கு நாடகப்பயிற்சி முகாம் செல்ல ரெடி என முன்னறிவிக்க வைக்கிறது.

தோள் தட்டி அணைத்துக்கொண்ட அவர் தோழர் எஸ் ஏ பி அவர்களின் கடித த்தை முன் தாங்கி அனுப்பி வைக்கிறார் நாடகப்பயிற்சி முகாமிற்கு/

தபால்பெட்டியில் சேர்க்கப்பட்ட கடிதமாக விருதுநகரிலிருந்து அஞ்சல் செய்ய ப்பட்டதபாலாகவும் கண்முழியாத கோழிக்குஞ்சாகவும் ஒரு மென்விடியலில் மார்த்தாண்டம் போய் சேர்கிறேன்,

புது ஊர்,புதிதான இடங்கள்,புதிதான ஜனங்கள்,புதிதான பாஷை,,,,கடையில் போய் எனது பிரியமான டீக்குடித்த பிறகு கொஞ்சம் ஆசுவாசம் கொண்ட வனாய் டீக்கடைக்காரரிடமே வழி கேட்கிறேன் நான் போய் சேரவேண்டிய இடத்திற்கு.

அப்பொழுதெல்லாம் அப்படித்தான் மனிதர்களின் மனம் தொட்டே பேசிய காலம்.

அருகில் தோள் உரசிச்செல்கிற சக மனிதர்களிடம் ஏதும் பேசாமல் கையில் உள்ளசெல்போனை ஆன் பண்ணி மேப்பில் சர்ச் பண்ணுகிற வேலை முளை கொண்டிருக்கவில்லை.

டீக்கடைக்காரர் சொல்லி அனுப்பிய வழியில் நூல் பிடித்துச் சென்ற போது பழைய கட்டிடம் ஒன்று இயற்கை பூசிய மரம் செடிகளுடனும் பச்சை பசேல் சூழவுமாய் உயிர் சாட்சியாய் நிற்கிறது,

கண்ணுக்குக் குளிச்சியான பச்சை,உடல் துளைத்த குளிர்,சுவர்களிலும்,நின்று கொண்டிருந்த உயர்ந்த மரங்களிலும் படர்ந்து நின்ற பாசி,,,,எல்லாம் தாண்டி கட்டிடத்தின் உள் சென்ற போது அங்கு கைநீட்டி வரவேற்ற திருச்சித்தோழர் முகில் திரு.அவர்களும்,திரு.முத்து நிலவன் அவர்களும் இன்னும் இன்னு மாய் பெயர் தெரி யாத தோழர்களும் நண்பர்களுமாய் பத்துக்கும் மேற்பட்ட வர்கள் இருந்த உயிர் கூட்டில் ஒருவனாய் நானும் ஐக்கியமாகிப் போகிறேன்.

ஏழு நாட்கள் பயிற்சி ,பின் மார்தாண்டத்திலிருந்து கிளம்பி மதுரை வரை தமிழ்நாடு அறிவியல் இயக்க நாடகப் பிரச்சாரப் பயணத்தின் நாடகங்களை நடத்திக்கொண்டு வருவது என்கிற திட்டத்தின் ஊடு பாவானநெசவின்நூலாக நானும் ஒருவனாய் கைகோர்க்கிறேன்.

ஏழு நாட்களும் நாடகப்பயிற்சி,நாடகப்பயிற்சி,,, என மட்டுமே பட்டை தீட்டப் பட்டுக் கொண்டும் புடமிடப்பட்டுக் கொண்மாய் இருந்த நாட்களில் மூன்றவ தோஇல்லை நான்காவதோ காட்டிய நாளில் திரு. பிரளயன் அவர்கள் எங்க ளுக்கு புது பயிற்றுனராக அறிமுகமாகிறார் சென்னைகலைக்குழுவைச் சேர்ந் தவர் என/

அது என்ன மந்திரம் எனத்தெரியவில்லை. அவர் வந்த மறு தினத்திலிருந்து ஒரு மின்சாரம் பற்றிக் கொள்கிறது,பயிறிப்பட்டரையிலும் எங்களிடமும்/

அரை குறையாயும் இன்னும் முடிக்கப் பெறாமலும் இருந்த நாடகப் பயிற்சி களை சடுதிகாட்டி முடிக்கமுனைகிறார்,

அதற்கு குழுவிலுள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை வலியு றுத்திய அதே வேளை பயிற்சி ஆரம்பித்த நாள் முடிக்க வேண்டிய தினம் அதன் நோக்கம்,பயணிக்க வேண்டிய தூரம் என எல்லாவற்றையும் பேராசிரி யர் அருணந்தி அவர் களின்துணையுடன் விளக்கியவர் இன்னும் மிச்சமிருக் கிற குறைந்த தினங்களில் நாம் பயிற்சி முடித்தும் பட்டை தீட்டப்பட்டும் புடமிடப்பட்டுமாய் வெளியேற வேண்டும் என்கிற சொல்லூக்கம் தந்து பயிற்சி முடிவடையும் நாட்களுக்கு முன்னாய் எங்களை முழுவதுமாய் பட்டை தீட்டி நாடக நடிகர்ளாய் வெளிக்கொணர்கிறார்,

மண்கீறி துளிர் விட்ட நாற்றாங்காலின் நாற்றுகளாய் முதல் நிகழ்ச்சி நடத்த திங்கள் சந்தை பஸ்நிலையத்தில் போய் நிற்கிறோம்.

கை கால்களுடன் சேர்ந்து உடலும் உள்ளமும் எடுத்த நடுக்கத்துடனும் கூச்ச த்துடனுமாய், இருந்த எங்கள் மத்தியில் வந்து அறிவிக்கிறார் திரு.பிரளயன் அவர்கள் ,நீங்கள் யாரும் இந்தக்களத்திற்கு புதியவர்கள் அல்ல, பழையவ ர்களே,,,,,நன்கு கற்று உள் வாங்கியவர்கள், என்கிற நினைப்பில் மேடையேறு ங்கள். தைரியமாக நாடகத்தை நடத்துங்கள், நாங்கள் இருக்கிறோம் வழி காட் டியாய் எனச்சொன்ன அவர் நாடகப் பிரச்சாரப் பயணம் மதுரையில் முடிந்த போது மேடையில் இருந்து நடித்து முடித்து விட்டு வந்த என்னைத் தூக்கி தட்டாமாலை சுற்றி கைகொடுத்தது இத்தனை வருடங்கள் கழித்தும் எனது நினை வுகளில் பசுமை காட்டியே./

அந்தபசுமை சுமந்த நினைவுகளின் கைபற்றியவாறே சொல்கிறேன், அவரை தோழர் என்றே அழைத்துக்கொள்கிறேன் என,,/ வணக்கம் தோழர்/

இன்று இரவு தற்செயலாய் முக நூலில் அவரது படத்தைப்பார்த்ததும் எழுதிய பதிவு/



(கேட்டு வாங்கிப்போட்ட பதிவு)

கருத்துகள்

  1. சுவாரஸ்யமான நினைவுகள். மார்த்தாண்டத்தில் என் நண்பன் கடை வைத்திருந்தபோது அவர் திருமணத்திற்கு வந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பும் பிரியமும் வைத்த
      கருத்துரைக்கு நன்றி/

      நீக்கு
  2. பொதுவுடமை கொள்கையில் உறுதியாய் இருந்தால் தோழர் என்று அழைப்பதே..சிறந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பூவாகி காயாகி,,,,,

கடித்தலும் கடித்தல் நிமித்தமும்,,,

சுழல் நகர்வுகள்,,,,